Wednesday, 28 September 2016


‘கண்டதும் காதல்’ (love at first sight ) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.  - 1.519
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்.  --  1.521
எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.
ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின் உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும் (இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்), ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.
எப்படிப்பட்ட வர்ணனை!  ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்!  அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம்.  தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?
                                                                                   ஒப்பீடு
முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.
இராவணன் அந்தண வேடமிட்டு, சீதையைக் கவர வருகிறான்.  அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள்.  தன்னைப் பற்றிச் சொல்லும் @பாது,
உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே ந
புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ நந 3-47-8
இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)
(பிறகு கைகேயியின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்பட்ட சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)
மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: ந
அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே நந 3-47-10
பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.
அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த @பாது அவளுக்கு ஆறே வயது (18-12=6) என்று விளங்கும்.  இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.
வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.
http://dhaariniulagam.blogspot.in/
Contact: Dharini Padhippagam, 32/79, Gandhi Nagar Fourth Main Road, Adyar, Chennai-600020Ph.919940120341